சென்னை: கோடம்பாக்கம் சத்யநாராயணன் தெருவை சேர்ந்த சிறுவர் முகமது இக்லாஸ்( 12). இவர் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மாலை நேரத்தில் முகமது இக்லாஸ் மசூதியில் அரபி வகுப்புக்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று(செப்.16) இரவு ஏழு மணி அளவில் முகமது இக்லாஸ் கோடம்பாக்கம் சக்கரபாணி தெருவில் உள்ள மசூதிக்கு சென்று அரபி வகுப்பை முடித்து விட்டு சைக்கிளில் இரவு 8 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கோடம்பாக்கம் ஆரிய கவுடா சாலை கண்ணதாசன் தெரு ஜங்ஷனில் வரும்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென சிறுவனை வழிமறித்து தாக்கியுள்ளார்.
பின்னர் சிறுவனிடம் உனக்கு தொப்பி ஒரு கேடா என கூறி தாக்கிய போது அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதால் அந்த நபர் உடனடியாக இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று தப்பியுள்ளார். காயமடைந்த சிறுவன் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் சிறுவனின் பெற்றோர் உள்ளிட்டோர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வைரல் வீடியோ...பாஜக நிர்வாகிகளை தாக்கும் பவுன்சர்கள்...