கரோனா தொற்று சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய கூடுதல் ஆணையர் உள்பட 50 காவலர்களை வரவேற்கும் நிகழ்ச்சி வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பங்கேற்று பணிக்குத் திரும்பியுள்ள காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும், கபசுரக் குடிநீரையும் வழங்கினார். பின்னர் கூடுதல் ஆணையர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கரோனா தொற்று தாக்காமல் இருக்க முகக்கவசம், கையுறை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த வேண்டும். மேலும் காவலர்கள் 200 விழுக்காடு பாதுகாப்பாக, முன்னெச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.
காவலர்கள் கையாளும் அனைத்துப் பொருள்களிலும் கரோனா இருக்க வாய்ப்புண்டு என்று நினைத்துக்கொண்டு முன்னெச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.
இதேபோல் நோய் எதிர்ப்புச் சக்திக்காக வழங்கப்படும் கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.