சென்னை: பட்டாபிராம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் டேவிட் (29). இவர் அரும்பாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராகவும், ஆய்வாளருக்கு வாகன ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார்.
கொலை கும்பலைத் தேடிய காவலர்கள்
இந்நிலையில் நேற்றிரவு (ஆகஸ்ட் 18) அண்ணா நகர் காவல் நிலையம் அருகே திமுக பிரமுகரான சம்பத் குமாரை ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இந்தக் கும்பலைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையில் டேவிட்டும் பணியாற்றி வந்தார்.
இரவு முழுவதும் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட டேவிட், பணியை முடித்துவிட்டு இன்று (ஆகஸ்ட் 19) காலை 8:30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி வழியாக தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார்.
லாரி மீது பைக் மோதி விபத்து
பாரிவாக்கம் ஜங்ஷன் வழியாக சென்றபோது நின்றிருந்த குப்பை லாரி மீது டேவிட் வேகமாக மோதினார். இதில் பலத்த காயமடைந்த டேவிட்டை அருகிலிருந்தவர்கள் மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் டேவிட் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக அரும்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பைக் மீது மோதிய கார்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி