நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை காவல்துறையினரால் இது வரையில், 100க்கும் மேற்பட்டோர்களிடம் விசாரணை நடந்து முடித்துள்ளது.
இது தொடர்பாக மேலும், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் பதிவான தகவல்களை மீட்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதாகவும் தனிப்படை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கோடநாடு பற்றிய விசாரணை
2017ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பான வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜன.28ஆம் தேதியான இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் சஜகான் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இது வரை 100க்கும் மேற்பட்டோர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தடயவியல் சோதனை
மேலும், இறந்துப்போன கனகராஜ், தனபால், ரமேஷ் ஆகியோர்களின் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவைகள், தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்து அவற்றில் பதிவான தகவல்கள் மீட்டெடுக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.
தனபால் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் கொடநாடு கொலை கொள்ளையில் முக்கிய பங்காற்றியுள்ளனர், அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜாமீன் மனு
இதனிடையே 2ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வாளையாறு மனோஜ் தனக்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனை ஜாமீனில் தளர்வுகள் வழங்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்.25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதேபோல, தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோர் பிணைக்கோரி தாக்கல் செய்த மனுவின் மீது தீர்ப்பு இன்று பிற்பகலில் வழங்கப்படுவதாக மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டம் வெளியீடு