திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 2018ஆம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு பங்கேற்றார். இதையடுத்து அவரை செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் முத்துகுமாரசாமி, ராஜசேகர் ஆகியோர் கைது செய்து புதுபாளையம் காவல் நிலையத்தில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து டில்லிபாபு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் முத்துகுமாரசாமி, ராஜசேகர் ஆகியோர், தன்னை கடுமையாக தாக்கி, ஆபாசமாக திட்டி, சட்டவிரோதமாக சிறைவைத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், "2006ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்த டில்லிபாபுவை காவலர்கள் நடத்திய விதம் அதிருப்தி அளிக்கிறது. ஆவண ஆதாரங்களிலிருந்து மனித உரிமை மீறல் நிரூபணமாகி உள்ளது. தமிழ்நாடு அரசு அவருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்தத் தொகையில், 50 ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட டிஎஸ்பி சுந்தரமூர்த்தியிடமிருந்தும், தலா 25 ஆயிரம் ரூபாய் உதவி ஆய்வாளர்கள் முத்துகுமாரசாமி, ராஜசேகர் இருவரிடம் இருந்தும் பெறவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மோட்டார் வாகன ஆய்வாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் வழக்கு ரத்து