சென்னை: விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூ குடியிருப்பில் வசித்து வந்த துணை நடிகையும் 'வாய்தா' திரைப்படத்தின் கதாநாயகியுமான பவுலின் ஜெஸிகா (எ) தீபா உண்மையில் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டாரா? என கோயம்பேடு காவல்துறையினர் தீவிர விசாரணை ஈடுபட்டுள்ள நிலையில், அவரின் காதலன் சிராஜுதீனை போலீசார் நாளை (செப்.22) விசாரிக்க உள்ளனர். இந்த விசாரணைக்காக, அவரிடம் 55 கேள்விகள் வரை கேட்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஐ-போன் காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரர் ராஜேஷ் தெரிவித்த நிலையில், அதுகுறித்து அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பவுலின் கடந்த சில ஆண்டுகளாக இயக்குநரும், தயாரிப்பாளருமான சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்தார். இதற்கிடையே கடந்த செப்.17 ஆம் தேதி இரவு நடிகை பவுலின் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். 'ஒரு நபரை உயிருக்கு உயிராக காதலித்த நிலையில், காதல் கைகூடாததால் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை' எனவும் அவர் எழுதி வைத்ததாக ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிசிடிவியில் சிராஜுதீனின் நண்பர்? தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய நாள் நடிகை பவுலின் வெளியே சென்றுவிட்டு ஆட்டோவில் திரும்பி வந்து சோர்வாக, வீட்டிற்கு நடந்து செல்வது மற்றும் நடிகை பவுலின் தற்கொலை செய்துகொண்ட பின் அவரது வீட்டிற்கு, அவரது காதலன் சிராஜுதீனின் நண்பர் பிரபாகரன் முதல் முதலில் வந்ததுமான இரு சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல்போன ஐ-போன்: இதற்கிடையே நடிகையின் உடலை உடற்கூராய்வுக்குப் பின் பெற சென்றபோது, நடிகை பவுலினின் சகோதரர் ராஜேஷ் பவுலின், தனது சகோதரி 3 செல்போன்களை பயன்படுத்தி வந்த நிலையில், அவரது ஐ-போன் ஒன்று காணாமல் போயுள்ளதாக போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகை பவுலின் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து முதன்முதலில் அவரது வீட்டிற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றவரும், காவல் துறையினருக்குத் தகவல் அளித்தவருமான சிராஜுதீனின் நண்பர் பிரபாகரன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நடிகை பவுலின் மற்றும் சிராஜுதீன் காதலித்து வந்தது உறுதியானது.
விசாரணையில் கோயம்பேடு போலீசார்: மேலும், நடிகை தற்கொலை தொடர்பாக சிராஜுதீன் தெரிவித்த தகவலின் அடிப்படையில், தான் பவுலின் வீட்டிற்கு வந்ததாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். கதவை உடைத்து முதலில் உள்ளே சென்றது பிரபாகரன் என்பதால், காணாமல் போனதாக சொல்லப்படும் நடிகை பவுலின் ஐ-போன் தொடர்பாகவும் பிரபாகரனிடம் கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
திடுக்கிட வைத்த காதலனின் பின்புலம்: இந்நிலையில் நடிகை பவுலின் செல்போன்களில் இருந்து சேகரிக்கப்பட்ட விவரங்களை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், நடிகையின் காதலனான சிராஜுதீன் ஏற்கெனவே திருமணமானவர் என்பது தெரியவந்தது. இதனால், அவர் சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகையை காதலித்துள்ளாரா? அல்லது நடிகையை மறு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினாரா? போன்ற பல சந்தேகங்கள் போலீசாருக்கு எழுந்துள்ளன.
விரைந்த சம்மன் - ஆஜராகும் காதலன்: இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பலமுறை அழைத்தும் சிராஜுதீன் விசாரணையை பல்வேறு காரணங்களைக் கூறி தட்டிக் கழித்து வந்த நிலையில், கோயம்பேடு போலீசார் மூலம் சிராஜுதீனுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக சம்மனை ஏற்று இயக்குநரும் தயாரிப்பாளருமான சிராஜுதீன் நாளை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஆஜராகவுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாகவும், நடிகையின் காணாமல்போன ஐ-போன் தொடர்பாகவும் சுமார் 55 கேள்விகளை சிராஜுதீனிடம் கேட்க போலீசார் தயாரித்து வைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஐ-போன் காணாமல் போன விவகாரம் தொடர்பாக நடிகை பவுலினின் சகோதரர் ராஜேஷை ஆந்திராவிலிருந்து வரவழைத்து நேரில் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கோயம்பேடு போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடிகை தற்கொலை விவகாரம் - வெளியானது சிசிடிவி... குற்றவாளியை நெருங்கும் காவல்துறை