சென்னை: திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணி. இவர் கடந்த 12 ஆம் தேதி காலை சவாரிக்கு சென்று விட்டு, மெரினா காமராஜர் சாலையில் வந்த போது, ராணி மேரி கல்லூரி அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு பை கீழே விழுந்ததை பார்த்துள்ளார்.
உடனடியாக வாகனத்தை நிறுத்தி அந்தப் பையை எடுத்து பார்த்தபோது, அதில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்துள்ளது. அதனை எடுத்து சுப்பிரமணி, பணத்தை மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இவரது இந்த நேர்மையை பாராட்டி சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று(பிப்.16) சுப்பிரமணியை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கி சிறப்பித்துள்ளார்.
கரோனா காலத்தில் வருவாய் குறைந்துவிட்ட சூழலில், நாள்தோறும் 12 மணி நேரம் ஆட்டோ ஓட்டினாலும் 200 ரூபாய் வீட்டிற்கு எடுத்து செல்வதே சவாலாக இருக்கிறது என்று தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணி, கீழே கிடந்த பணத்தை பார்த்ததும் அதை தவறவிட்டவர்கள் என்ன அவசர தேவைக்காக எடுத்து சென்றானரோ என்று தோன்றியதாக கூறினார். அந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்ததே தனக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போக்குவரத்து விதியை வலியுறுத்தும் மதுரை மாநகர காவல்துறையின் அசத்தல் குறும்படம்