பிரதமர் நரேந்திர மோடி வருகிற 14ஆம் தேதி பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க சென்னைக்கு வருகைதர உள்ளார். இதில், பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.
பிரதமர் மோடி வருகைபுரிவதால் சென்னை விமான நிலையம், அடையாறு ஐஎன்எஸ், நேரு விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் நான்கு அடுக்கு காவல் துறை பாதுகாப்பு போட திட்டமிட்டுள்ளனர்.
தேர்தல் நெருங்கும் நேரம் என்பதாலும், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருவதாலும் மோடி வருகைதருவதால் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதால் மத்திய உளவுத் துறை, மாநில உளவுத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், பிரதமர் வருகையின்போது கொடுக்க வேண்டிய பாதுகாப்புகள் குறித்து மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் காவல் துறை உயர் அலுவலர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
எந்தவித அசாம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க சென்னை முழுவதும் ஆறாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல் சென்னை பெரியமேடு, திருவல்லிக்கேணி, மண்ணடி ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து தேசிய பாதுகாப்புப் படையின் தென்மண்டல ஐஜி அலோக் வர்மா தலைமையில் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க...தேர்தல் திருவிழா 2021: திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!