சென்னை: திருவல்லிக்கேணி வெங்கடேசபுரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் பவித்ரா (26). செவிலியாக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 12ஆம் தேதி ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி தனது கணவர் ஊழியர்களுக்கு பணம் கொடுக்க பீரோவில் வைத்திருந்த பணத்தை எடுக்கச் சென்றபோது இரண்டு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 21 சவரன் நகைகள் காணாமல் போயுள்ளதாகவும் திருடுபோன நகை, பணத்தை மீட்டுத் தரக்கோரியும் குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த கைரேகை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் மூன்று கைரேகை பதிவுகள் பதிவாகி இருந்தன.
திருடனை கண்டறிந்த காவல் துறையினர்
இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, வீட்டிற்கு வரக்கூடிய நபர் ஒருவர் பீரோவிலிருந்த நகை மற்றும் பணத்தைத் திருடிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதனால் வீட்டாருக்கு நன்கு தெரிந்த நபர்களே திருட்டில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகமடைந்த காவல் துறையினர், கடைசியாக பவித்ராவின் செல்போன் எண்ணிலிருந்து சென்ற தொலைபேசி எண்களை ஆய்வு செய்த போது சுமன் (23) என்பவரை அடிக்கடி அழைத்தது தெரியவந்தது.
செல்போன் எண்களை வைத்து தனிப்படை காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சேலையூர் அருகேயுள்ள பதுவஞ்சேரியில் தலைமறைவாக இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுமனிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியானது.
திருடிய பணத்தில் கார்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலமாக பவித்ராவுடன் சுமனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இருவரது பழக்கம் நட்பாக மாறி சுமன் அடிக்கடி பவித்ரா வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் 12ஆம் தேதி பவித்ரா வீட்டின் பீரோவில் நகை மற்றும் பணம் இருப்பதை அறிந்து கொண்ட சுமன் திருடத் திட்டமிட்டுள்ளார்.
வீட்டில் பவித்ரா தனியாக இருந்த போது உணவு வாங்கி வர பவித்ராவை அனுப்பிவிட்டு, பின்னர் வீட்டிலிருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 21 சவரன் நகைகளைத் திருடிவிட்டு சகஜமாக பேசிவிட்டு சுமன் சென்றுள்ளார்.
பின்னர் திருடிய பணத்தில் சுமன் கார் ஒன்றை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமனிடமிருந்து ரூ. 1,60,000 பணம் மற்றும் 20.861 கிராம் நகைகள் மற்றும் காரை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், சுமனை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மதுரை அரசு பணியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை