சென்னை: ஐஐடியில்(Chennai IIT) கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக சமஸ்கிருத மொழியில் இறைவணக்கம் பாடியதை கண்டித்து மத்திய கைலாஷ் பகுதியில் பாமக மாநில மாணவர் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீராம் ஐயர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
முதல் கட்ட போராட்டம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஶ்ரீ ராம் ஐயர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் நடைபெறாத அநீதி ஐஐடியில் நடைபெற்று வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து வருவதை கண்டித்து பலமுறை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வழங்கியும் கேட்காத காரணத்தால் தற்போது முதல் கட்டமாக சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளோம் என கூறினார்.
![பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் சங்கம் சார்பில் 300 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-iit-thamizhthai-vazhthu-ignored-pmk-protest-7209652_23112021153626_2311f_1637661986_20.jpeg)
மேலும், இதே தவறு மீண்டும் நடந்தால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் எனக் கூறிய அவர் "தமிழ் மொழி குறித்து கொள்கை வைத்துள்ள திமுக அரசு இதனை முதலில் கண்டித்து இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை; எனவே தமிழக அரசு ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து அறிக்கை வெளியிட வேண்டும், அதுமட்டுமல்லாது தமிழ்நாடு மக்களுக்கும் மொழிக்கும் அநீதி நடைபெற்றால் முதல் குரல் பாமக கொடுக்கும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், மாநில துணைப்பொதுச்செயலாளர்கள் சகாதேவன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஜெய் பீம் சர்ச்சை; நடிகர் சூர்யா மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு