இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குவைத்தில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் அங்கு தங்கியிருந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, தாயகத்திற்கு அனுப்பத் தயாராக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குவைத் நாட்டின் மாங்கஃப் (Mangarf) என்ற இடத்தில் உள்ள ஆண்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் பலருக்கு நேற்றிரவு (மே 25) உணவு வழங்கப்படவில்லை.
இதை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்ற சிலர், தங்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும், இதில் ஆந்திரத்தை சேர்ந்த ஒருவருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் புகார் கூறிய அனைவரையும், தனிமைப்படுத்தி, முட்டி போட வைத்து, அவமானப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த முகாம்களில் 450 பேர், வெளியில் 250 பேர் என தமிழ்நாட்டைச் சேர்ந்த 700 பேர் மட்டுமே உள்ளனர். அதிகபட்சமாக இரு விமானங்கள் மூலம் அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து விட முடியும். எனவே, இனியும் தாமதிக்காமல் சிறப்பு விமானங்களை இயக்கி குவைத்தில் தவிக்கும் தமிழ்நாட்டு தொழிலாளர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாஜக அரசின் மக்கள் விரோதப்போக்கு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்!