இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாகத் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், அவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்து, 30ஆவது ஆண்டு தொடங்குகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றமே ஆணையிட்டும், இதில் ஆளுநர் முடிவெடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
கருணை அடிப்படையில் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என, 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதன் அடிப்படையில், எழுவரை விடுதலை செய்ய 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதியன்று (செப்டம்பர் 9, 2018) தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அவ்வாறு அனுப்பி இன்றுடன் 1,007 நாள்கள் ஆகியும், அதன்மீது முடிவெடுக்கவில்லை.
இது தொடர்பாக எத்தகைய சட்ட ஆலோசனைகளை நடத்துவதாக இருந்தாலும், அதற்கு ஒரு மாதம் அவகாசம் போதுமானதாகும். அவ்வாறு இருக்கும்போத இவ்வளவு நால்களாகியும் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை என்றால், அதற்கு எழுவரை விடுதலையாகி விடக் கூடாது என்ற எண்ணம்தான் காரணமாக இருக்க வேண்டும். ஆளுநர் என்ற உயர் பதவியில் இருப்பவர், சட்டத்தின் அடிப்படையில்தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, வேறு காரணங்களின் அடிப்படையில் முடிவெடுக்கக் கூடாது.
எனவே, வாழ்நாளின் பெரும்பகுதியை இழந்துவிட்ட அவர்களின் நிலை உணர்ந்து விடுதலை குறித்து ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு உரிய முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி-க்கு முதலிடம்