சென்னை: வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
ஒன்றிய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதில் பல பேர் போராட்ட களத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சூழலில், பிரதமர் நரேந்திர மோடி புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ராமதாஸ், "வேளாண் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். உழவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள் ஓராண்டாக கடுங்குளிர் உள்ளிட்ட கொடுமைகளை அனுபவித்துப் போராடினார்கள்; 150-க்கும் மேற்பட்ட உழவர்களை இழந்தனர். ஆனாலும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சாதித்துள்ளனர். இது உழவர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி!
உழவர்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும். இதைக் கருத்தில்கொண்டு கோதாவரி - காவிரி உள்ளிட்ட நதிநீர் இணைப்புகள், பாசனத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். விளைபொருள் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி