இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் எட்டப்படுவது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய தொற்றுகள் குறைந்து வரும் நிலையில், இதேநிலையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் நேற்று புதிய தொற்று ஏற்படவில்லை என்பது நிம்மதியை அளித்திருக்கிறது.
கடந்த சில வாரங்களில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை வைத்துப் பார்க்கும் போது, அடுத்த சில வாரங்களில் கரோனா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கி விட முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதற்காக நாம் செய்ய வேண்டியது ஊடரங்கு ஆணை, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை முன்பை விட மும்மடங்கு கூடுதலாக கடைபிடிப்பதுதான்.
சென்னையைப் பொறுத்தவரை நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தாலும் கூட, அச்சப்பட எதுவும் இல்லை. இந்தியாவின் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது, சென்னையில் 10 லட்சம் பேருக்கு 3100 சோதனைகள் என்ற அளவில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனால் தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது. ஆகவே, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளித்தால் கரோனா ஒழிப்பு போரில் வெற்றி விரைவில் சாத்தியமாகும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வியாபாரிகளுக்கும் கரோனா - 600 கடைகளுக்கு மட்டுமே அனுமதி!