இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைகாட்சிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மூவருக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மேலும் பல பத்திரிகையாளர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அவர்களுக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் ஆளாவோர் பட்டியலில் மருத்துவர்களுக்கு அடுத்தப்படியாக பத்திரிகையாளர்கள்தான் உள்ளனர். மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியிலும் கணிசமான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டு, அவை குறித்த செய்திகளை ஊடகங்களுக்கு தெரிவிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டால், பத்திரிகையாளர்கள் களத்திற்கு வர வேண்டிய தேவை இருக்காது. அதன் மூலம் கரோனா ஆபத்திலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அலுவலர்களில் தொடங்கி அமைச்சர்கள், முதலமைச்சர் வரை அனைவரும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கும் தகவல்களை செய்திக்குறிப்புகளாக ஊடகங்களுக்கு அனுப்பலாம். ஒருவேளை இதுகுறித்த செய்திகள் தொலைகாட்சிகளில் காட்சிகளாகத்தான் வர வேண்டும் என்று அரசு விரும்பினால், திரைப்படப் பிரிவு அல்லது செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் படம் பிடித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கலாம். பேரவை அலுவல்கள் அவ்வாறுதான் படம் பிடித்துத் தரப்படுகின்றன.
எனவே, கரோனா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பை அரசு கைவிட வேண்டும். தேவையற்ற பிற நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிப்பதை, பாதுகாப்பு கருதி ஊடகங்கள் தவிர்க்கலாம். அதேபோல், ஊடக அலுவலகங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து, வைரஸ் தொற்றிலிருந்து நான்காவது தூண்களின் பிரதிநிதிகளைக் காப்பாற்ற அரசும், ஊடக நிறுவனங்களும் முன்வர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவர்கள் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் - கமல் ஹாசன் ட்வீட்