இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்றாக சென்னை மாநகரத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தியாவின் சுகாதாரத் தலைநகராகவும், மருத்துவச் சுற்றுலா மையமாகவும் அறியப்பட்ட சென்னை, இப்போது கரோனா ’ஹாட் ஸ்பாட்’டாக மாறியிருப்பது வேதனையளிக்கிறது.
பெரும்பான்மையான மக்கள் ஊரடங்கை மதிக்காததன் விளைவாகத் தான் சென்னையில் கரோனா வைரஸ் பரவல் அச்சப்படும் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, கரோனா பரவலில் மும்பை, புனே, அகமதாபாத், சூரத், ஐதராபாத் ஆகிய நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டதற்கும் இது தான் காரணமாகும்.
சென்னையில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதை உணர்ந்து தான் அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளை அரசு மூடியிருக்கிறது. சென்னையிலும், சென்னையின் புறநகர் மாவட்டமான செங்கல்பட்டிலும் நாளை முதல் 4 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் அளிப்பது உள்ளிட்டப் பணிகளை அரசு பார்த்துக் கொள்ளும் நிலையில், கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு பங்களிக்க வேண்டியது நமது கடமையாகும். அதை உணர்ந்து அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு மட்டுமின்றி, சென்னையில் நிலைமை சீரடையும் வரை ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க மக்கள் முன்வர வேண்டும் " எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை - தேனி மாவட்டத்துக்கு ரூ. 46 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கிய ஓபிஎஸ்