சென்னை: தமிழ்நாட்டில் 2022-23ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் நாளை (செப். 1) தொடங்கவிருக்கும் நிலையில், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 75 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு 100 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
நெல்லுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாட்டு உழவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் காவிரிப் பாசன மாவட்டங்களின் சாகுபடிக்காக மேட்டூர் அணை நடப்பாண்டில் மே மாதம் 24ஆம் தேதியே திறக்கப்பட்டதன் பயனாக குறுவை அறுவடை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. அதைக்கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் பருவம் அக்டோபர் மாதத்திற்குப் பதிலாக செப். 1ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி முன்கூட்டியே நாளை முதல் நெல் கொள்முதல் தொடங்கவிருப்பது பல வழிகளில் விவசாயிகளுக்கு நிம்மதியளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'ஆர்எஸ்எஸ் மனப்பான்மை உடைய நீதிபதியிடம் விநாயகர் ஊர்வலம் வழக்குகளா...?' - கீ. வீரமணி கேள்வி