சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த போட்டியில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் தங்குவதற்காக சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 37 நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் போட்டியில் கலந்துகொள்ள ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சி.ஆர் சாலைகளை பயன்படுத்தி மாமல்லபுரம் செல்ல திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்த சாலைகளில் முழுமையான பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே 4 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வரும் பிரதமர் மோடி தனி விமானத்தில் அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து பின் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அடையாறு விமான தளம் செல்கிறார். பின் அங்கிருந்து சாலை மார்க்கமாக மாலை 6 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அதன் பின்னர் 7.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ராஜ் பவனுக்குச் சென்று அன்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.
பின்னர் மறுநாள் காலை 10 மணியளவில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அவர், நிகழ்ச்சிக்குப் பின் சுமார் 11.30 மணியளவில் மீண்டும் சாலை மார்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து 12 மணியளவில் மீண்டும் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்லவுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி சென்னை விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அடையார் ஐ.என்.எஸ் ஆகிய இடங்களைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் எனவும், 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக நிகழ்ச்சி நடக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், மாநகருக்குள் பிரதமர் மோடி செல்லும் வழித்தடங்களில் 100 மீட்டர் இடைவெளிவிட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் அந்த வழித்தடங்களில் உள்ள உயரமான கட்டடங்கள் ஆகியவற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த இரண்டு நாட்களும் சென்னை மாநகருக்குள் ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் உள்ளிட்டவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடல்வழியாக வந்த போலாந்து நபர் கைது - சட்டவிரோதமாக நுழைந்தாரா... தீவிர விசாரணை