சென்னை: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்துசெய்யப்பட்டது. தொடர்ந்து, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிகாட்டுக் குழு நியமிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் குறைவான மதிப்பெண் கிடைத்துள்ளதாகக் கருதி துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், ஏற்கனவே தேர்வெழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்களுக்கும் இன்று தொடங்கி 19ஆம் தேதிவரை துணைத் தேர்வு நடைபெறுகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கை
தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம்செய்து, முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் 14 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் இன்று ஆயிரத்து 457 பேர் தேர்வு எழுத பதிவுசெய்துள்ளனர். தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் ஆகியோர் பார்வையிட்டனர். கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு தேர்வு நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்விலிருந்து அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் விலக்கு