சென்னை: 11 ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 1 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும், விடைத்தாள் நகல் மற்றும் மறுக் கூட்டலுக்கு ஜூன் 30 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக தேர்வு எண் மற்றும் பிறந்தத் தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுக்கூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களின் மூலமாகவும் ஜூன் 30 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூலை 7 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் , மறுக் கூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். தேர்வர்கள் தெளிவான முடிவு செய்துக் கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க இயலும்.
மதிப்பெண் மறுக்கூட்டல் கேட்டு விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பிக்க இயலாது. விடைத்தாளின் நகல் பெற்றப்பிறகு அவர்கள் மறுகூட்டல் , மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டினை மாணவர் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தேர்வர்கள் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்தத் தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் எம்.பி.ஏ படிப்பவர்களுக்கு 100 விழுக்காடு வேலைவாய்ப்பு உறுதி!