சென்னையில் நடைபெற்ற வீதி விருது விழா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுத் தொகையை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் பாண்டியராஜன், சென்னை ஐஐடியில் அரவணைப்பு மையம் உருவாக்கியுள்ளனர். அந்த அரவணைப்பு மையத்தின் நோக்கம் தற்கொலையை தடுப்பதாகும்.
அதில் நான்கு மன தத்துவவியல் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஐஐடியில் சராசரியாக 7 முதல் 10 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய கல்வி நிறுவனம் என கூறக்கூடிய ஐஐடியில் படித்தால் நல்ல சம்பளத்தில் வேலை நிச்சயம். ஆனால் அந்தக் கல்வி நிறுவனத்தில் அதிக அளவில் மன அழுத்தம் இருக்கிறது. கலை பண்பாட்டு நிகழ்ச்சிக்கு நான் சென்றபோது ஐஐடியின் பாடத்திட்டத்தில் இசை மற்றும் கலைகளை சேர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன். அங்கு படிக்கும் மாணவர்கள் அதிகளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர். மாணவர்களுக்கு ஏதாவது ஒரு வடிவத்தில் கலைகளை கற்றுத் தாருங்கள் என தெரிவித்தேன்.
தப்பாட்டம் அமெரிக்காவில் கற்றுத்தரப்படுகிறது. எட்டு ஆண்டுகளாக தரப்படாமல் இருந்த கலைமாமணி விருதினை ஒரேநாளில் அறிவித்து கலைஞர்களுக்கு வழங்கியுள்ளோம்.
மேலும் கவிமாமணி விருதை ஐந்து சவரனாக உயர்த்தி உள்ளோம். கலைமாமணி விருது வழங்குவதில் நாட்டுப்புறக் கலைஞர்கள் நான்கு சங்கங்களாக இருப்பதால் தொடர்ந்து பிரச்னைகள் எழுகின்றன. நாட்டுப்புறக் கலைகளை எவ்வாறு வகைப்படுத்தி சிறந்தவை என்பதை கண்டறிவதில் பிரச்னை உள்ளது.
தஞ்சை தமிழ் பல்கலைகழகம் மற்றும் டாக்டர் ஜெயலலிதா இயல் இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் இணைந்து கலைகளை வகை பிரிக்க உள்ளோம்.
கலைஞர்கள் பல்வேறு பிரிவுகளாக இல்லாமல் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் எளிதில் விருதுகளை வழங்குவதற்கு முடியும். கலைஞருக்கு விருது வழங்கினால் மற்றொரு குழுவினர் நீதிமன்றத்திற்குச் செல்கின்றனர். போஸ்டர் அடித்து ஓட்டுகின்றனர்.
இது போன்ற செயல்களால் கலைமாமணி விருது வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. நாட்டுப்புறக் கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.