சென்னை: அண்ணாப் பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அண்ணாப் பல்கலைக் கழகத்தின் வளாக கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான அறிமுக வகுப்பு நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அப்போது மாணவர்களுக்கு யோகா, கலச்சாரம், மாணவர்களுடன் பழகுதல், கல்லூரியில் உள்ள துறைகள் குறித்தும், ஆய்வகங்கள் மற்றும் வசதிகள் குறித்தும் காண்பிக்கப்படும்.
மாணவர்களுடன் பேராசிரியர்கள் கலந்துரையாடுவர். இந்த புத்தாக்கப் பயிற்சியினை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டால் அடுத்த 4 ஆண்டுகளில் சிறப்பாக படிப்பதற்கு உதவியாக இருக்கும்.
அண்ணாப் பல்கலைக் கழகத்தின் உறுப்புக்கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளுக்கு நவம்பர் 8ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். அப்போது மாணவர்களுக்கு 15 நாட்கள் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து கல்லூரியில் உள்ள இட வசதிக்கு ஏற்ப நேரடி வகுப்புகளை தொடங்கிக் கொள்ளலாம்.
அண்ணாப் பல்கலைக் கழகத்தின் வளாக கல்லூரிகளில் நவம்பர் 16 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடத்தப்படும். ஜனவரி மாதத்திற்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.
பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2,3,4ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் 6 மாதத்தில் எழுதி முடிக்கப்படும்.
இந்த பாடத்திட்டம் உருவாக்கும் பணியில் தொழிற்துறையினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் பட்டப்படிப்பினை முடித்த பின்னர் திறன்களை அதிகரிக்கும் வகையிலும், தொழில் முனைவோர்களாக உருவாகும் வகையிலும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது" எனதெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு அலுவலர்களை மிரட்டுவதை திமுகவினர் நிறுத்த வேண்டும் - எடப்பாடி.பழனிசாமி