கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையிலும், 2 பேர் மட்டும் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஆட்டோக்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த திலீப் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர், முன்னெச்சரிக்கையாக ’பிபிஇ’ எனப்படும் தனி நபர் பாதுகாப்பு உடை அணிந்து, பயணிகளுக்கும், ஓட்டுநர் இருக்கைக்கும் இடையில் கண்ணாடி தாள் திரை அமைத்து இயக்கிவருகிறார்.
பாதுகாப்பு நிறைந்த இப்பயணம் போலவே, தான் ஆட்டோ ஓட்ட தொடங்கிய சுவாரஷ்யமான கதையையும் திலீப் குமார் நம்மிடையே விவரித்தார். புகைப்படக் கலைஞராக 20 ஆண்டு காலம் அனுபவம் பெற்ற இவர், தமிழ் பத்திரிகைகள், வெளிநாட்டு பத்திரிகைகள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியுள்ளார்.
பின்னர், நிரந்தர பணி ஏதும் இல்லாததால் குறும்படங்கள், ஆவணப்படங்கள் எடுத்துவந்துள்ளார் திலீப் குமார். ஊரடங்கிற்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர்களின் பிரச்னையை ஆவணப்படுத்துவதற்காக ஆட்டோவை வாடகைக்கு எடுத்த இவர், ஆட்டோ ஓட்டுவதில் ஏற்பட்ட ஆர்வத்தால் அதனையே தனது தொழிலாகவும் மாற்றிக் கொண்டுள்ளார்.
கரோனா பாதிப்பு, ஊரடங்கு ஏராளமானோரின் வாழ்க்கைத் தடத்தை மாற்றியிருந்தாலும், தனக்கு ஏற்பட்ட பிரச்னைகளையும், இன்னல்களையும் புன்முறுவலோடு எதிர்கொண்டு, பயணத்தைத் தொடரும் திலீப் குமாரின் செயல் நம் அனைவருக்குமே ஊக்க மருந்து.
இதையும் படிங்க: ஊரடங்கால் தடுமாறும் உணவகங்கள்... உதவுமா அரசு?