சென்னை: தங்களின் கோரிக்கைகளை முதலமைச்சருக்கு மனுவாக ஒப்பந்த மருந்தாளுநர்கள் அனுப்பியுள்ளனர்.
அவர்கள் அனுப்பிய மனுவில், “சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள நாங்கள் எட்டு ஆண்டுகள் வரை ஒப்பந்த மருந்தாளுநர்களாக பணியாற்றி வருகிறோம். கடந்த பத்து மாத காலங்களாக கரோனா காலகட்டத்திலும் எந்தவித சலுகைகளும், எந்தவித விடுப்புகளும் இன்றி எங்களது பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறோம்.
முதன் முதலில் எங்களுக்கு மாத சம்பளமாக ரூ.7,500 வழங்கப்பட்டது. பிறகு ரூ.9,000 ஆக உயர்த்தப்பட்டது. பிறகு ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது மூன்று மாத காலங்களாக ரூ.1,000 உயர்த்தி ரூ.1,100 ஆக வழங்கப்படுகிறது. ஆனால் எங்களிடம் ரூ.15,000 என்று கணக்கு காட்டி எங்களது மாதச் சம்பள பட்டியலில் (payslip) கையெழுத்து பெற்றுக்கொள்கிறார்கள். எங்களது முகவரான ‘ஐயானிஸ்ரீ கார்பரேட் சர்வீசஸ் பிரைவைட் லிமிடெட்’ எங்களிடம் சம்பளப் பட்டியல் (pay slip) கொடுப்பதில்லை. மாத சம்பளம் வர 10 முதல் 15ஆம் தேதி வரை ஆகிவிடும்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழுள்ள 155க்கும் மேல் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் 155க்கும் மேற்பட்ட மருந்தாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதில் ஏறத்தாழ வெறும் 50 பேர்கள் மட்டுமே நிரந்தர மருந்தாளர்களாக உள்ளனர். மீதம் உள்ளோர் ஒப்பந்தப் பணியாளர்களாகவே உள்ளனர். இதில் பணிக் காலம் விரைவில் முடியும் நிலையில் இருப்பவர்களின் இடத்தை, ஒப்பந்த பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கி அந்தந்த இடங்களை நிரப்பிட வேண்டும்.
இக்கோரிக்கைகளைப் பரிசீலித்து எங்களை நிரந்தரப் பணியாளர்களாக அமர்த்திட வேண்டும் அல்லது நிரந்தர பணியிடங்களை நிரப்பும் பொழுது எங்களுக்கே முதல் உரிமை வழங்கிட வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.