தேனி, போடிநாயக்கனூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் படி பல்வேறு மக்கள் பயனடைந்து வருகின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை(Right to Information Act) பயன்படுத்தி வரும் ஆர்வலர்கள் பலர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும், அடையாளமே தெரியாத முறையில் இறந்தும் வருகின்றனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், தகவல் பெறும் ஆர்வலர்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கு, மத்திய உள்துறை 2013ஆம் ஆண்டு சட்டத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி மாநில அரசு அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஆர்டிஐ ஆர்வலர்களைக் காப்பாற்ற தனி அமைப்பு தேவை
எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தும் ஆர்வலர்களைப் பாதுகாக்க, தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என மனு அளித்துள்ளேன். இந்த மனு தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் தரப்பில் நிலுவையிலேயே உள்ளது.
இந்த மனுவை பரிசீலனை செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் பெறும் ஆர்வலர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கண்காணித்துக் கொண்டு இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் மனுவை நான்கு மாதத்திற்குள் பரிசீலித்து, தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: தாயால் தாக்கப்பட்ட குழந்தை - வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த அமைச்சர்