10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு, எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள், தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு ஆகியவை செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதிவரையில் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வின்போது தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அதில், “தேர்வுப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும்
முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருத்தல் வேண்டும். தேர்வுப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய ஆரோக்கியம் குறித்த சுய உறுதிமொழியினை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
தேர்வு மையத்தில் அறைக் கண்காணிப்பாளர்களுக்கு கூட்டம் நடத்துதல், தேர்விற்கு முன்னர் அறைக் கண்காணிப்பாளர்களுக்கு வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை வழங்குதல் மற்றும் தேர்வு முடிவடைந்த பின் அறைக் கண்காணிப்பாளர்களிடமிருந்து விடைத்தாள்களை பெறுதல் போன்ற பணிகளின் போது கண்டிப்பாக தகந்த இடைவெளி பின்பற்றப்படுதல் வேண்டும்.
தேர்வு மையத்திற்கு முகக்கவசம் அணியாமல் வரும் தேர்வர்களுக்கு முகக்கவசம் வழங்குதல் வேண்டும். அதற்கு ஏதுவாக, தேர்வு மையங்களில் கூடுதலாக முகக்கவசங்களை வைத்திருக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.
தேர்வர்கள் கையுறை அணிந்து தேர்வெழுத விரும்பினால், அதற்கு அனுமதி வழங்கலாம். தேர்வர்கள் தங்களுடன் கைக்கிருமி நாசினி எடுத்து வந்திருந்தால், அதனை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
தேர்வர்கள் தங்களுடன் தண்ணீர் பாட்டில் எடுத்து வந்திருந்தால், அதனையும் தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். தேர்வு முடிவடைந்த பின்பு தேர்வர்களை போதிய இடைவெளியுடன் தேர்வு மையத்தை விட்டு அனுப்பி வைக்கும் பணியினை, துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் மேற்கொள்ளுதல் வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.