பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பள்ளிக்கல்வித்துறையின் ஆணையராக இந்திய ஆட்சிப்பணி அதிகாரி நியமனம் செய்யப்படுவார் என ஏற்கனவே 2014 ஜூன் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக சிஜி தாமஸ் வைத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பள்ளிகளின் தரத்தினை மேம்படுத்துவற்கான பணிகளையும், ஒழுங்குப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்வார். பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம், தொடக்கக்கல்வித்துறை, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம், அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் ஆகியவற்றின் பணிகளையும், நடவடிக்கையையும் கண்காணித்து மேற்பார்வையிடுவார்.
கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பள்ளிகளை ஆய்வு செய்து ஆலோசனைகளையும் வழங்குவார். பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மீதான நடவடிக்கையில் மேல்முறையீட்டு அதிகாரியாக இவர் நியமனம் செய்யப்படுகிறார்.
பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து திட்டங்களையும் விதிகளின் அடிப்படையில் செயல்படுத்தும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்கள் வழங்கப்படுவதை கண்காணிப்பார் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் அரசாணையின்படி ஒரு பள்ளிக்கு சென்று ஆய்வு செய்யும் பொழுது அந்த ஆசிரியர் தரமான கல்வியை அளிக்காமல் இருப்பதாக கருதினால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியும். அவர்கள் மீண்டும் மேல் முறையீடு இறுதியாக பள்ளிக்கல்வித்துறை ஆணையரிடம் மட்டுமே செய்யும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான திட்டங்களை சரியாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் உள்ளிட்ட அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: பயணங்கள் தொடரும்...! அடடே ஓ.பி.எஸ்.!