சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிகளுக்கான உயர் மட்டக்குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று (அக்டோபர் 21) நடைபெற்றது. இதில், பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம், 25,213 கோடி ரூபாய் அளவிற்கான தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்து, சுமார் 49,003 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்குவது உறுதியாகியுள்ளது.
இத்திட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். மேலும் இக்கூட்டத்தில், ஒற்றை சாளர முறையில் வழங்கப்பட்ட தொழில் அனுமதிகள், பெரும் தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்புடைய நிலுவை இனங்கள், தொழில் தோழன் தகவு மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தொடர்புடைய இனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சம்பத், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இதுவரை, இரண்டு உயர்மட்டக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, 34 தொழிற்திட்டங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் 15,000 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 23,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மழைக்கால தொற்றுநோய் குறைந்துள்ளது- சுகாதாரத்துறை செயலர்