மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “கடற்கரை மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் என 34 ஆயிரத்து 349 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 152 பேர் புயல் பாதுகாப்பு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிவர் புயல் இன்றிரவு 10 மணி அளவில் தொடங்கி நாளை 2 மணிக்குள் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண் பகுதி, சுவர் பகுதி, மையப் பகுதி என மூன்று படிநிலையாக புயல் கரையைக் கடக்கும். அப்போது புயலானது பயங்கர சத்தத்தோடு அல்லது அமைதியாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, மழை நின்றுவிட்டது, புயல் கரையைக் கடந்துவிட்டது என நினைத்து பொதுமக்கள் என்று வெளியே வந்துவிடக் கூடாது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பிறகே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும். அதுவரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
செம்பரம்பாக்கம் ஏரி குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தற்போது மூன்றாயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. படிப்படியாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பாதுகாப்பான முறையில் நீர் வெளியேற்றப்படும். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : நிவர்: செம்பரம்பாக்கத்திலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் - 2015 மீண்டும் திரும்புகிறதா?