சுட்டெரிக்கும் கோடை முடிந்து பருவமழை தொடங்கினாலே விவசாயிகள் தொடங்கி அனைவருக்கும் ஒருவித அகமகிழ்ச்சி ஏற்படும். ஆனால், சென்னைவாசிகளுக்கு அச்ச உணர்வு வந்து விடுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளம் உருவாக்கிய வடு அது. அந்த நேரத்தில் உணவின்றி, நீரின்றி, மின்சாரமின்றி, உடைமைகளை இழந்து மக்கள் கண்ணீரில் மிதக்க, மாநகரம் தண்ணீரில் மிதந்தது.
அடையாற்று வெள்ளப்பெருக்கால் முடிச்சூர், மணிமங்கலம், பரத்வாஜ் நகர், ராயப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து மாடி கட்டடங்களும் மூழ்கின. இதனால் பலகோடி ரூபாய் உடைமைகள் பறிபோனதோடு, கணக்கில் வராத உயிர்களும் நீரில் கலந்தன. இதற்கு காரணம் முன்னறிவிப்பற்ற செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு என்றாலும், அடையாறு ஆறு முறையாக தூர் வாரப்படாமல் கரைகள் பலப்படுத்தப்படாமல் இருந்ததும்தான்.
மறக்க முடியாத அந்த பெருமழைக்காலம் ஏற்படுத்திய பயம், அதன்பின் வரும் ஒவ்வொரு மழையையும் ஒருவித பதட்டத்துடனேயே எதிர்கொள்ளும் நிலைக்கு மக்களை ஆளாக்கியுள்ளது. அப்படித்தான், இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக மழை பெய்யும் என்ற வானிலை மைய அறிவிப்பு, அடையாறு ஆற்றங்கரையோர மக்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்று ஐந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அடையாறு ஆறு தூர்வாரும் பணி இன்னும் நடைபெறுவதாக பொறுமுகின்றனர் அப்பகுதியினர். மழை நெருங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனடியாக எடுப்பதோடு, ஆற்றில் தடுப்பணைகளை கட்டவும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
வெள்ளப்பெருக்கு அச்சத்தால் முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடி வருவதற்கே மக்கள் அஞ்சுவதாகக் கூறும் மக்கள், புல் புதராக மாறியுள்ள ஆற்றை சீர் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். மழைநீர் கால்வாய்களை சரிவர அமைக்காததால் இருநாட்களுக்கு முன் பெய்த மழைக்கே சென்னை, புறநகர் பகுதிகள் தத்தளிப்பதாகவும் கூறுகின்றனர்.
அரசின் அலட்சியத்தால் மழை நீர் நிலத்தடி நீராக மாறாமல், சாலைகளில் தேங்கும் கழிவாகி வீணாவதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். முந்தைய ரணம் இன்னும் மாறாமல் பேசும் மக்களின் குறையறிந்து, உடனடியாக அடையாறு ஆற்றினை முழுமையாக தூர் வாரி கரைகளை பலப்படுத்தினால் மட்டுமே, மீண்டும் ஒரு பேரழிவை சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் சந்திக்காமல் இருக்கும் என்பதே முந்தைய வெள்ளத்தில் தப்பி பிழைத்தவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: 13 மாவட்டங்களில் கனமழை! - வானிலை மையம் தகவல்!