சென்னை : இஸ்ரேல் நாட்டின் தனியார் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள பெகாசஸ் மென்பொருள் மூலம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னணி பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தற்போதைய ஒன்றிய அமைச்சர்கள் அஸ்வினி வைஸ்ணவ், பிரகலாத் பட்டேல், முன்னாள் தேர்தல் அலுவலர் அசோக் லவாசா எனப் பலரும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எதிர்க் கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் சின்னமலையில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி சிலை அருகிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி கண்டனப் பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, "பெகாசஸ் உளவு மூலம் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. என் வீட்டில் நடப்பதை இஸ்ரேல் நிறுவனம் பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி வாழ்க்கை நடத்துவது.
என்.எஸ்.ஓ நிறுவனம் அரசாங்கத்துக்கு மட்டுமே சேவையாற்றும். பிரதமர் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பாஜக ஜனநாயகத்தை காலில் போட்டு நசுக்குகிறது.
வாய் திறக்க அஞ்சுகின்றனர்
பெகாசஸ் மென்பொருள் மூலம் யாராலும் உளவு பார்க்க முடியும். ராணுவ தளபதி, சீன எல்லையில் உள்ள கமாண்டர் என்ன பேசுகிறார்கள் என இஸ்ரேலிய நிறுவனம் ஒட்டுக்கேட்டு எதிரி நாடுகளிடம் தகவலை விற்கலாம். நாட்டில் உள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்து ஊடகங்கள் பேச வேண்டும். அதிகாரத்துக்குப் பயந்து பல சிந்தனைவாதிகள், ஊடகங்கள் வாய் திறக்க அஞ்சுகின்றனர்.
தவறு செய்ததே அவர்கள் தான்
பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். ஆளுநரிடம் மனு கொடுக்கலாம் என நினைத்தேன், தவறு செய்ததே அவர்கள் தான் என்பதால் போராட்டத்தை மட்டும் நடத்துகிறோம்" என்றார்.
காங்கிரஸ் கட்சியினர் சிறிது தூரம் பேரணியாக சென்று பின்னர் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட அக்கட்சி முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க :போதும்டா சாமி - வாய்திறந்தது பெகாசஸ் செயலியின் என்எஸ்ஓ குழுமம்