கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
வழக்கமாக பள்ளி, கல்லூரிகள் இருக்கும் வழித்தடங்களில் செல்லும் பல பேருந்துகள் காலியாக செல்கின்றன. மேலும், தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்கள் 50 விழுக்காடு ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும் என்றும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதால் தரமணி, எஸ்ஆர்பி டூல்ஸ், ராஜிவ் காந்தி சாலை, ஒலிம்பியா, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இது தொடர்பாக பேசிய சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலர் ஒருவர், தற்போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நாள்தோறும் 2 ஆயிரத்து 790 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
![சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02:28:11:1619081891_tn-che-01-mtc-bus-service-saw-dipin-passengers-7208446_22042021141604_2204f_1619081164_463.jpg)
மேலும், முதல் பொது முடக்கம் முடிந்தபின் பேருந்து சேவை தொடங்கப்பட்ட செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 400 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அலை தீவிரம் காட்டி வரும் சூழலில், அதனைவிட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறினார்.
பேருந்துகளில் பயணிகள் நின்று பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, அலுவலக நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இருப்பினும், நகரின் சில பகுதிகளில் காலை நேரங்களில் பயணிகள் நின்று பயணம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. மேலும் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப பேருந்து சேவை அதிகரிக்கப்படும் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.