சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது, நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் "நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்" செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களிலும், ஏனைய மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலத்திலும், 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒன்று என 7 நகராட்சிகளிலும், 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சி வீதம் 37 பேரூராட்சிகளிலும் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "பெருநகர சென்னை மாநகராட்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களைக் கொண்ட தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் ஆகிய இரண்டு மண்டலங்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 28 ஆயிரத்து 6 நபர்களுக்கும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 19 ஆயிரத்து 56 நபர்களுக்கும் என மொத்தம் 47 ஆயிரத்து 62 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இவ்விரு மண்டலங்களிலும் உள்ள ஒவ்வொரு வார்டிலும் நாளொன்றுக்கு குறைந்தது 100 வேலையாட்களைப் பயன்படுத்தி, மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. எனவே, தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆதார் அட்டையுடன், மண்டல அலுவலரை அணுகி தங்கள் வேலைவாய்ப்பிற்கான அடையாள அட்டையினை பெற்று பயனடையுமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? ராதாகிருஷ்ணன் பதில்!