தமிழகத்தில் மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு நவம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆன்லைன் மூலம் 12 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தரவரிசைப் பட்டியல் 16 அன்று வெளியிடப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. இதில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.படிப்பில் 86 இடங்களும், பி.டி.எஸ். படிப்பில் 80 இடங்களும் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல் பொதுக்கலந்தாய்வில் 1,061 எம்.பி.பி.எஸ் இடங்களும், 985 பிடிஎஸ் இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
மருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கையேட்டிலேயே கல்வி கட்டண விவரங்கள் வெளியிடப்படும். அதன் அடிப்படையிலேயே பெற்றோர் தங்களின் பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்ப்பதற்கு தயார் ஆவார்கள். இந்நிலையில், சுயநிதி தொழிற்கல்விக்கான கட்டண நிர்ணயக்குழுவின் தலைவரான ஒய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன், மருத்துவப்படிப்பிற்கான கல்வி கட்டணத்தை மாற்றி அமைத்து அக்டோபர் 12 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஸ்ரீமுத்துக்குமரன், அன்னபூர்ணா, தாகூர், மாதா, கற்பக விநாயகா ஆகியவற்றில் 3 லட்சத்து 85 ஆயிரமும், ஸ்ரீமுகாம்பிகை, வேலம்மாள், கற்பகம் ஆகிய மருத்துவக்கல்லூரிகளுக்கு 3 லட்சத்து 90 ஆயிரமும், சென்னை மருத்துவக்கல்லூரி, திருச்சி மருத்துவக்கல்லூரிகளுக்கு 3 லட்சத்து 95 ஆயிரமும், கோவை பிஎஸ்ஜி, தனலட்சுமி சீனிவாசன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, பனிமலர் ஆகிய மருத்துவக் கல்லூரிகளுக்கு 4 லட்சமும் கல்விக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நவம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கையேட்டில், பழைய கல்வி கட்டணமே இடம் பெற்றுள்ளதால் பெற்றோர் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர். மருத்துவப்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ந்து அலட்சியாமாகவே இருப்பது வேதனை அளிப்பதாக பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரத்துசெய்யப்பட்ட தேர்விற்கான செலவுகள் எவ்வாறு கணக்கிடப்பட்டது? - நீதிமன்றம் கேள்வி