அண்மையில் வெளியிடப்பட்ட ஐஐடி கரக்பூர் ஆய்வு அறிக்கையில், நாம் பேப்பர் கப்பில் அருந்தும் மூன்று கப்பு தேநீருடன், 75 ஆயிரம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உட்கொள்கின்றோம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் யாரும் எவர்சில்வர், கண்ணாடி, செராமிக்ஸ் உள்ளிட்டவையில் தயாரிக்கப்படும் டம்ளர்களை பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், அவை சரியாக கழுவப் படுவதில்லை என அனைவரும் எண்ணி அதில் ஜூஸ், தேநீர், சூப் உள்ளிட்டை அருந்த மறுத்துவிடுகிறோம்.
அதற்கு பதிலாக யூஸ் அண்டு த்ரோ(use and throw) எனப்படும் பேப்பர் கப்களை பயன்படுத்துகிறோம். ஒருவருக்கு ஒரு கப், கழுவத் தேவையில்லை, வேலை மிச்சம் என நாம் அன்றாட வாழ்க்கையில் அங்கமான பேப்பர் கப்களில் எவ்வளவு ஆபத்து உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?.
தேநீர் கடை முதல் அலுவலகங்கள் வரை பேப்பர் கப் பயன்பாடுதான். அப்படி பேப்பர் கப்களை பயன்படுத்தும் நாம் அத்துடன் விஷத்தையும் அருத்தி வருகிறோம் என்கிறது சில ஆய்வு முடிவுகள். இதுப்பற்றி பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜியோ டாமின்,
"பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் டம்ளர் பாதுகாப்பானது இல்லை, பேப்பர் கப்தான் பாதுகாப்பது என நினைக்கும் பலருக்கும் இது பெரும் அதிர்ச்சியைத் தரும். பேப்பர் கப்பில் ஆபத்து உள்ளது என்பது பலநாள்களாக சொல்லிவரும் கதைதான்.
ஆனால் தற்போது புகழ்பெற்ற பல்கலைக்கழக ஆய்வில் சொல்லியிருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பேசுப் பொருளாகவும் மாறியுள்ளது. முதலில் பேப்பர் கப் என்று அழைக்ககூடிய அவற்றில், பாலித்தீன், கோ பாலிமர்களால் ஆன ஹைட்ரோ ப்ரோபேன் பூசப்படுகின்றன.
எளிமையாகச் சொன்னால் அவை பிளாஸ்டிக் மற்றும் மெழுகு போன்ற பொருள்கள் தயாரிக்கப்படுபவை. இது வெறும் பிளாஸ்டிக் தேநீர் கப்களுடன் முடிந்துவிடக் கூடிய விஷயம் அல்ல. குழந்தைகளுக்கு பால் கொடுக்க உபோயோகிக்கும் பீடிங் பாட்டில், வாட்டர் பாட்டிகள் உள்ளிட்டவையும் அடங்கும்.
சாதாரணமாக அடிக்கடி பிளாஸ்டிக் மூலக்கூறுகள் உள்ள பீடிங் பாட்டில், வாட்டர் பாட்டில், பேப்பர் கப்கள் உள்ளிட்டவையில் எது அருந்தினாலும் ஆபத்துதான். அதுவே சூடான தண்ணீர், தேநீர், சூப் ஆகியவற்றை அருந்தினால், அத்துடன் 75 ஆயிரம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களுக்கும் அதிமாக நாம் அருந்துகிறோம் என எண்ணிக்கொள்ளலாம்.
இதற்கு முடிவு என்ன என்று பார்த்தால் சுலபம்தான் நாம் காலம் காலமாக பின்பற்றிய, கண்ணாடி, எவர்சில்வர், செராமிக்ஸ் டம்ளர்களை பயன்படுத்தலாம். அதனால் உடலும், சுற்றுச்சுழலும் பாதுகாக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
அதையடுத்துப் பேசிய மருத்துவரும், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க உறுப்பினருமான ஷாந்தி கூறுகையில், "பேப்பர் கப்களினால் நமது உடலில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் செல்கின்றன. அதனால் உடல் பருமன், மாதவிடாய் பிரச்சனை, மலட்டு தன்மை அதிகரிக்கும்.
குறிப்பாக உடலில் எந்தப் பகுதியிலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை பிளாஸ்டிக் துகள்கள் ஏற்படுத்தும். கடந்த பத்து ஆண்டுகளாக மார்பக புற்றுநோய், இளம்வயதில் பூபெய்தல், கருத்தரித்தலில் பிரச்சனை ஆகியவற்றிக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். முதலில் பேப்பர் கப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
முடிந்த வரை கண்ணாடி, எவர்சில்வர் டம்ளர்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், அலுவகங்கம் செல்வோர் தனக்கென டம்ளரை வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லாம். அரியாத பேப்பர் கப்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோன்ற ஆய்வுகளை அரசு ஊக்குவித்து பிளாஸ்டிக் மூலக்கூறுகள் கொண்ட பொருள்களை ஒட்டுமொத்தமாக தடுக்க திட்டம் கொண்டுவர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2025ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் கலப்பு இல்லாத தயாரிப்புகள் - கூகுள் திட்டவட்டம்!