இது தொடர்பாக மீனவர் சங்கத்தின் கே.ஆர்.செல்வராஜ்குமார், எம்.ஆர்.தியாகராஜன் ஆகியோர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், “மதுரை அனுப்பானடியில் உள்ள வேலம்மாள் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி, அதன் மருத்துவக்கழிவுகளை முறையாக சுத்திகரிக்காமல் அருகில் உள்ள காலி நிலங்களிலும், நீர் நிலைகளிலும் கொட்டுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு, காற்று மாசு, நிலத்தடி நீர் பாதிப்பு ஆகியவை ஏற்படுகிறது.
சுற்றுச்சூழல் அனுமதி பெறாத இடங்களிலும், கட்டுமானங்களை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. எனவே, விதிகளை மீறி செயல்படும் வேலம்மாள் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தலைமை செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சைபால் தாஸ்குப்தா ஆகியோர் விசாரித்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஸ்டான்லி ஹெப்சன் சிங், கே.மகேஷ்வரன் ஆகியோரும், தலைமை செயலாளர் தரப்பில் வழக்கறிஞர் வி.ஆர்.திருநாராயணன், மாசு கட்டுப்பாட்டு வாரியத் தரப்பில் சி.காசிராஜன் ஆகியோர் ஆஜராயினர்.
அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆகியோரை இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரர் தரப்பிற்கு உத்தரவிட்டதுடன், வழக்கு குறித்து தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வேலம்மாள் மருத்துவமனை ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் அமைச்சகம், மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு மூத்த அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுவை அமைப்பதுடன், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து, விதிமீறல் இருந்தால் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
அதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பின் அளவு குறித்தும், மண் மற்றும் நீரின் தரம் குறித்தும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீரின் மாசுபாடு குறித்தும், அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது குறித்தும் அறிக்கையில் தகவல் அளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நாட்டின் 72ஆவது குடியரசு தின விழா: மெரினா காமராஜர் சாலையில் முதல் நாள் ஒத்திகை