சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர் வாரி ஆழப்படுத்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சுந்தர்ராஜன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று (பிப்.10) தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆழப்படுத்தி நீர் தேக்கமாக மாற்றினால் அங்குள்ள பல்லுயிரின வளத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், விஞ்ஞான ரீதியான எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளாமல், செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை மேம்படுத்துவதற்கும், பாதுகாக்கவும் 2012ஆம் ஆண்டு 'பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு ஆணையம்' அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆணையத்தின் மூலமாக அல்லாமல் தூர்வாரும் திட்டத்திற்காக சுமார் 21 கோடி ரூபாயை நேரடியாக வனத்துறைக்கு தமிழ்நாடு அரசு வழங்கியது சட்ட விரோதம் எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதிகள் இதுதொடர்பாக 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் திருவிழா 2021: சென்னையில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்!