திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.பி. சங்கரை ஆதரித்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, இன்று அங்குள்ள மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ”ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், வளர்ச்சி திட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும், மக்கள் விரோத சட்டங்களுக்கு துணை போகும் வகையில் பாஜக அரசுக்கு ஆதரவளித்து செயல்படும், பழனிசாமி அரசு வீழ வேண்டும் என்ற நோக்கத்துடன், வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்.
வகுப்புவாத கலாச்சாரத்தை தமிழகத்தில் திணிக்க முயன்று, அதனால் அதிமுகவின் முதுகில் சவாரி செய்கிறது பாஜக. டெல்லியில் கடந்த 124 நாட்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுவரை பிரதமர் அவர்களை சந்திக்கவில்லை. வேளாண் சட்டங்களை அமல்படுத்தினால் ஒவ்வொரு மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூடப்படும். அப்படி மூடப்பட்டால் அரிசி, பருப்பு கிடைக்காமல் மக்களின் வாழ்க்கை மிகவும் பின்னுக்குத் தள்ளப்படும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, ”முதல் முறை வாக்காளர்களான இளைய சமுதாயத்தினர் திமுகவிற்கு தான் வாக்களிப்பது என உறுதியாக உள்ளனர். சென்னையில் நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக கூட்டணி வெற்றி பெறும். மேலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகிவிட்டது. எத்தனை இடங்கள் என்பதற்காகதான் காத்திருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: தேர்தல் ரேஸில் தொடர்ந்து ஓடும் குதிரைகள்!