சென்னை: தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. இதையடுத்து வரும் ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி, வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், ’தேர்தல் மன்னன்’ என்று அழைக்கப்படும் பத்மராஜன், 230ஆவது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியான பேரவை செயலாளர் சீனிவாசனிடம் தனது வேட்புமனுவினைத் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பத்மராஜன், "230ஆவது முறையாக மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.
தேர்தலில் தோல்வியையே நான் விரும்புகிறேன். என்னை யாரும் தேர்வு செய்ய மாட்டார்கள் என்று தெரிந்தும், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறவே இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். 50 லட்சம் ரூபாய் இதுவரை தேர்தல் செலவுக்காக செலவழித்துள்ளேன். 1987-ல் இருந்து நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து, தோல்வி அடைந்துள்ளேன். நரசிம்மராவ் முதல் ராகுல்காந்தி வரை அனைவரையும் எதிர்த்துப் போட்டியிட்டேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது