சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவரும் குமரி அனந்தனின் 90வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வேட்டி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய ப. சிதம்பரம், "இந்திய அரசியலில் குமரி அனந்தன் தெரிந்து கொள்ளாத விஷயம் இருக்கமுடியாது. குமரி அனந்தன் 1933ஆம் ஆண்டில் பிறந்தார். அன்று நடந்த வரலாறுகள், தற்போது பாடப்புத்தகத்தில் மறைக்கப்பட்டு வருகிறது.
அன்றைய காலகட்டத்தில் நடந்த வரலாற்றை மறைத்து வருகிறார்கள். இன்னும் வருகிற நாள்களில் 2014ஆம் ஆண்டில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று பாஜகவினர் எழுதினாலும் எழுதுவார்கள். பாடப்புத்தகத்தின் வாயிலாக தான் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும். அந்த நிலை மாறி, வேறு வகையான நூல்கள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
இளைஞர்களுக்கு நேரு முன்னூதராணம்
ஜவஹர்லால் நேரு தனது 40 வயதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். இளைஞர்கள் பொறுப்பிற்கு, பதவிக்கு வரமுடியாது என்ற எண்ணத்தை நாம் மனதளவிலாவது ஒழிக்க வேண்டும். குமரி அனந்தன் தன் (சுயசரிதை) வரலாற்றை எழுதவேண்டும். அவர் எழுதினால் அதில், தமிழ்நாட்டின் வரலாறு, காங்கிரஸ் கட்சியின் வரலாறு இடம் பெறும். அதனை ஓரிரு வருடங்களில் அவர் எழுதி எங்களுக்கு தரவேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை தெரிவித்து கொள்கிறேன்" என பேசினார்.
முன்னதாக, பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, "இலக்கிய செல்வர் குமரி அனந்தன் ஒரு வரலாற்று பெட்டகம். தேசியத்திற்கான, காங்கிரஸ் கட்சிக்காக அவர் ஆற்றிய பங்கு மறக்கமுடியாது.
தேசத்தை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் வீறுகொண்டு எழ வேண்டும். அரசியல் இயக்கத்தில் வெற்றியும் வரும், பின்னடைவும் வரும். நாம் தோல்வி வரும்போது துவண்டு விடுகிறோம். நமக்கு நம்பிக்கை வேண்டும். நாம் தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்த முடியும்.
ராகுல் காந்தி தலைமையில் வழிநடப்போம்
சிறந்த தலைமை வேண்டும், உறுதியான தலைமை வேண்டும். அப்படி இருந்தால் இயக்கத்தை வழிநடத்த முடியும். சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் வழிநடப்போம். பா.ஜ.க திறமையாக செயல்பட்டு அனைத்து வகையிலும் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த கட்சியின் தலைமயை குற்றஞ்சாட்டுகிறார்கள்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏபிவிபி முன்னாள் தேசியத் தலைவர் வன்கொடுமை சட்டத்தில் கைது