தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஒடிசா மாநிலம், ரூர்கேலாவுக்கு ஆக்ஸிஜன் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று(மே.13) இரவு 9.45 மணிக்கு புறப்பட்டது. திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு டேங்கர்களுடன் முதல் ஆக்ஸிஜன் ரயில் ஏற்கனவே புறப்பட்டது.
ஆக்ஸிஜன் நிரப்பட்டு, அது அங்கிருந்து புறப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் இங்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர், ஒடிசா இடையேயான 1,685 கி.மீ. தூரத்தை விரைந்து கடக்கப் பச்சை வழித்தடம்(Green corridor) அமைக்கப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
அதேபோல், மேற்குவங்க மாநிலம், துர்காபூரில் இருந்து ஆக்ஸிஜன் நிரப்பிய மற்றொரு சிறப்பு ரயில் தமிழ்நாடு நோக்கி வந்து கொண்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, இந்த சிறப்பு ஆக்ஸிஜன் ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.