பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
" நீட் தேர்வு ரத்து என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்து ஆட்சிக்கு வந்த பின் 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்ற உத்தரவை பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்து இருப்பதாக வந்திருக்கும் செய்தி 'சொல்வது ஒன்று: செய்வது ஒன்று' என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது.
கரோனா தாக்கம் கடுமையாக உள்ள இந்தக் காலத்தில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்ற அறிவுரையை பள்ளிக் கல்வி ஆணையர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கியிருபப்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது.
50 வினாக்கள் அடங்கிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிடுவது முன்னுக்கப்பின் முரணாண செயல். எனவே 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நேற்றே இந்த நுழைவுத்தேர்வை ரத்து செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
பதினொன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கு உயர் நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட பிரிவில் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்தால், அவர்களுக்கு 50 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் தேர்வு நடத்தி, மதிப்பெண் அடிப்படையில் விருப்ப பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை நேற்றே ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தக்குமார் உத்தரவிட்டார். மேலும் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்தால் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவரின் விருப்பத்தின் அடிப்படையில் பாடப் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.