சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் முதல் முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்காக இன்று (மார்ச் 21) நேரில் ஆஜரானார். முன்னதாக, காலையில் நடந்த விசாரணையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து எதுவும் தெரியாது என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, இதுதொடர்பான விசாரணைக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் மீண்டும் பிற்பகலில் ஆஜரானார். பின்னர் அவரிடம் ஆணையம் விசாராணையைத் தொடர்ந்தது.
எனக்கு எதுவும் தெரியாது
அப்போது விசாரணை ஆணையத்தில், 'நோயின் தன்மையை பொறுத்து வெளிநாடுகளுக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம் சிசிக்சை அளிக்க அரசியல் பிரபலங்களை உயர் சிகிச்சைக்காக அழைத்து செல்வது தவறு இல்லை. தர்ம யுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே.
மேலும், சசிகலாவின் அழைப்பின் பெயரில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்க கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது' என வாக்குமூலம் அளித்தார்.
இன்று நடந்த இந்த விசாராணையில் ஏறத்தாழ 78 கேள்விகள் எழுப்பட்டன. மேலும், இது தொடர்பான விசாரணையானது நாளை (மார்ச் 22) வரை தொடர்ந்து நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல தடையாக இருந்தது எது? - ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம்