சென்னை: பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் தென்சென்னை வடக்கு மாவட்ட துணை செயலாளர் மற்றும் சசிகலா ஆதரவாளர் ஆவின் வைத்தியநாதன் நேற்று சந்தித்தார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆவின் வைத்தியநாதன், "தனியார் காட்சி ஊடகத்தை பாரதிய ஜனதா கட்சிக்கு சி.வி.சண்முகம் தாரைவார்த்துவிட்டார். ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி வந்தால் அதிமுகவையும் பாரதிய ஜனதா கட்சியிடம் தாரைவார்த்து விடுவார்கள். இதற்காக சி.வி.சண்முகத்திற்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த தனியார் காட்சி ஊடகமானது அதிமுகவிற்கு சொந்தமானது ஆகும். கே.பி.முனுசாமி முன்பு ஓபிஎஸ் பக்கம் இருந்தார். தற்போது ஈபிஎஸ் பக்கம் சென்றுள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசும் பொழுது, அவர் சசிகலாவின் தலைமையை ஏற்பதற்கு தயாராக இருக்கிறார் என கூறினார். தொண்டர்கள் நாங்கள் கூறினால் சசிகலா அதிமுகவை வழிநடத்துவதற்கு வருவார். ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சசிகலாவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் ஒரே காரில் அழைத்துச் செல்வோம். சசிகலா சார்பாக எங்களுடைய முழு ஆதரவையும் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ் அவர்களுக்கு தான்" என கூறினார்.
இதையும் படிங்க: 'பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்' - ஓபிஎஸ் எழுதிய கடிதம் நீதிமன்றத்தில் தாக்கல்