சென்னை: ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாகி விட்ட சூழலில், கட்சியை வழிநடத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக்க பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர். இக்கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது.
74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் பங்கேற்றனர். 5 பேர் சில காரணங்களால் வர முடியவில்லை என கடிதம் கொடுத்துள்ளனர். 4 பேர் பங்கேற்கவில்லை. வரும் ஜூலை 11இல் பொதுக்குழு கூட்டம் கூட்ட அழைப்பிதழை தபாலில் அனுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளை வெளியில் சொல்ல முடியாது. ஓபிஎஸ் பொருளாளராக நீடிப்பாரா என்பது ஜூலை 11இல் நடக்கும் பொதுக்குழுவில் தெரியவரும்.
ஓபிஎஸ்-க்கு கட்சியின் அடிப்படை விதிகளே தெரியவில்லை. தூங்குபவரை எழுப்பிவிடலாம், தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது. துரோகத்தின் ஒட்டுமொத்த அடையாளமாக இருப்பவர் ஓபிஎஸ்.
துரோகம் என்பது அவர்களின் உடன்பிறந்த ஒன்று. அவரது மகன் ரவீந்திரநாத் முதல்வரை சந்தித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதாக கூறுகிறார். இதனை எந்தவொரு அதிமுக தொண்டனும் விரும்ப மாட்டான்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: VIDEO: கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் முகம்... அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு...