சென்னை: புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் குடியேறியவர்கள், குடிசை மாற்று வாரியத்தின் வீடுகள் மோசமான தரத்தில் உள்ளதாகவும், அடிப்படை வசதிகள்கூட இல்லை என்றும், கட்டடத்தில் விரிசல்கள், கழிவுநீர் உட்புகுதல் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாகவும் முன்னதாக புகார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, சென்னை, எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஐ.பரந்தாமன், முன்னாள் துணை முதலமைச்சரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், கட்டட ஒப்பந்தக்காரர் உள்ளிட்டவர்களை விசாரிக்கக் கோரி நேற்று (ஆக.19) சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதனால், இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் கதி கலங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பினாமி கட்டிய கட்டடம்?
மேற்குறிப்பிடப்பட்ட குடிசை மாற்று வாரிய கட்டடம் 2017ஆம் ஆண்டு நாமக்கல்லைச் சேர்ந்த எம்.எஸ் பி.எஸ்.டி இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்சன் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டது எனத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இந்த கட்டுமான நிறுவனத்தை பி.எஸ்.டி.எஸ்.தென்னரசு என்பவர் நடத்தி வந்தார் எனவும், இவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய நண்பர் எனவும் கூறப்படுகிறது. தென்னரசு இபிஎஸுக்கு பினாமியாக இருந்தவர் எனவும் கூறப்படுகிறது.
அதிமுக அரசும் தென்னரசுவும்...
ஆனால், தற்போது அங்கு குடியேறிய மக்கள் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தரமற்றவையாக இருக்கிறது எனப் புகார் அளித்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பணி நடந்து கொண்டிருக்கும்போது பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் கே.ஆர்.சுப்பிரமணியம் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய தற்கொலை கடிதத்தில் தென்னரசின் பெயர் இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்தக் கடிதத்தில் தென்னரசு தனக்கும் தனது ஊழியர்களுக்கும் பெரிய தொந்தரவை கொடுத்ததாகவும், தனக்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தென்னரசு முக்கிய அமைச்சர்களையும் அலுவலர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
அதிமுக பதிலடி கொடுக்கும்...
இது குறித்து அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "இது திமுகவின் பழி வாங்கும் நடவடிக்கையாகும். வழக்கமாக திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக நிர்வாகிகளின் மீது வீண் பழி போட்டு அவர்களின் பெயர்களை கெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்.
அந்த வகையில்தான் திமுக எம்எல்ஏ இந்த வீண் பழியை பன்னீர்செல்வம் மீது சுமத்தியுள்ளார். திமுக அரசு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதிமுகவும் தக்க பதிலடி கொடுக்கும்" எனக் கூறினார்.
'புதிய வீடு, புதிய வாழ்க்கை' - ஏமாந்த மக்கள்!
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு புளியதோப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஆனால், டோக்கன் ஒதுக்கப்பட்டவர்களிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என குடிசை மாற்று வாரியம் சார்பில் கேட்கப்பட்டதாக பொதுமக்களால் கூறப்பட்டது.
இதில் 112.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு முதற்கட்டமாக 864 வீடுகள் கட்டப்பட்டன. இரண்டாம் கட்டமாக 139.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,056 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று முடிந்தன.
இந்நிலையில் டோக்கன் வழங்கப்பட்டவர்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் வீடுகள் வழங்கப்படாததால், ஒரு மாதத்திற்கு முன்னர் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தில் மக்கள் தாமாகவே குடியேறினர். 'புதிய வீடு, புதிய வாழ்க்கை' என்ற வாரியத்தின் வாசகத்தை நம்பி புதிய வீட்டிற்குச் சென்ற அவர்களுக்குப் பேரதிர்ச்சியே கிடைத்தது.
வீட்டிற்குள் சிமென்ட் பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்தன. விரல்களால் அழுத்தினால் சிமென்ட் கையோடு பெயர்ந்து விழுந்துள்ளது. கதவு, சட்டங்கள், ஜன்னல்கள் ஓரம் வெடித்து எந்நேரத்திலும் விழும் நிலையில் தற்போது உள்ளன. இதனால், தினமும் அச்சத்தில் வீடுகளுக்கு வெளியே மக்கள் உறங்கி வந்த நிலையில், தற்போது போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.