சென்னை : பி.கே. மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக நடத்த தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் பிறந்த ஊரில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வாரிசும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியிலிருந்தும், 1957, 1962, 1967, 1971 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் உசிலம்பட்டி தொகுதியிலிருந்தும் தொடர்ச்சியாக ஆறு முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டவர் பி.கே. மூக்கையா தேவர்.
இவர், தற்காலிக பேரவைத் தலைவராகவும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர். மறைந்த தியாகி பி.கே. மூக்கையாத் தேவர் மாணவப் பருவத்திலிருந்தே பொதுக் காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டு, நீதிக்கும், நேர்மைக்கும், நியாயத்திற்கும் போராடியவர்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கள்ளர் இனத்தைச் சார்ந்தவர்கள் குற்றப் பிரிவினராக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதனை ஒழித்து, அந்த இனத்தினுடைய பாரம்பரிய பெருமைகளை வெளிக் கொணர்ந்து, அவர்களின் உயர்வுக்கு வழிவகுத்தவர்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போலவே, ஒரே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸினால் ஆரம்பிக்கப்பட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராக 1971 ஆம் ஆண்டு உயர்ந்து, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து வலுவான வாதங்களை மக்களவையில் முன்வைத்தவர்.
கல்விப் பணியில் இவர் ஆற்றிய பங்கு போற்றத்தக்கது. சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து, உசிலம்பட்டி, நீலித்தினல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் இவர் நிறுவிய கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்கும் வசதி, உணவு ஆகியவை வழங்கப்பட்டன.
மேலும் பிற்படுத்தப்பட்ட மக்களை தூக்கிவிட பாடுபட்டவரும், உறங்காப் புலி என பெருமையோடு அழைக்கப்பட்டவரும், வீரம் மிகுந்த மண்ணின் மைந்தருமான மறைந்த தியாகி பி.கே. மூக்கையா தேவர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா
ஏப்ரல் 4, 2022 அன்று ஆரம்பிக்க இருப்பதால், அதனை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
அவர் பிறந்த ஊரான பாப்பாபட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளிக்கு பி.கே. மூக்கையா தேவர் பெயரை சூட்ட வேண்டுமென்பதும் தென் தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திகிறேன்” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைமுதலமைச்சர்!