சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒமைக்ரான் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற வேளையில், கடந்த 27ஆம் தேதியன்று 605ஆக இருந்த கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை டிசம்பர் 28 அன்று 619 ஆகவும், கடந்த 29ஆம் தேதியன்று 739 ஆகவும், நேற்று (டிசம்பர் 30) 890 ஆகவும் உயர்ந்து கொண்டே செல்கின்றது.
இந்நிலையில், திருச்சியில் மாநாடு போன்ற கூட்டத்தைக் கூட்டி அந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றியிருப்பது வேலியே பயிரை மேய்வதுபோல் அமைந்துள்ளது.
கட்டுப்பாட்டை ஸ்டாலினே மீறியிருப்பது வேதனை!
கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முகக்கவசம் அணிவதும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதும், ஆங்காங்கே கூட்டங்கள் கூடுவது தடுக்கப்படுவதும்தான் முக்கியம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறிவருகிறார்கள்.
இதனை நூறு விழுக்காடு உறுதிசெய்ய வேண்டும் என்று கடந்த பத்து நாள்களில் மட்டும் இரண்டு அறிக்கைகள் வாயிலாக முதலமைச்சருக்கு நான் வேண்டுகோள்விடுத்திருந்தேன். ஆனால், முதலமைச்சரோ அவர் போட்ட கட்டுப்பாட்டினை அவரே மீறியிருக்கிறார்.
இது மிகுந்த வேதனையளிக்கிறது. கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை இன்றுவரை (டிசம்பர் 31) நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக கடந்த 13ஆம் தேதியன்று நாளிட்ட செய்தி வெளியீடு எண். 1336 தெரிவிக்கிறது.
கரோனா அச்சம்: பெருந்திரள் கூட்டத்தில் முதலமைச்சர்
அந்தச் செய்தி வெளியீட்டில், பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் நலன் கருதி சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்குத் தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குப் பொருள் என்னவென்றால் அரசு விழா உள்பட பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளும் தடைசெய்யப்படுகிறது என்பதுதான். அதனால்தான் அந்தச் செய்தி வெளியீட்டிலே 'போன்ற' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதற்கு முற்றிலும் மாறாக டிசம்பர் 30 அன்று நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் தஞ்சாவூரிலும், திருச்சியிலும் பெருந்திரளான கூட்டங்கள் கூட்டப்பட்டு அந்த விழாக்களிலேயே முதலமைச்சர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றியிருக்கிறார்.
நீங்களே மீறலாமா ஸ்டாலின்
திருச்சியிலே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், 'நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் நேரு மீண்டும் ஒரு மக்கள் கடலை இங்கே உருவாக்கி இருக்கிறார். தம்பி மகேஷ் சொன்னார், மாநாட்டு மன்னர் என்று. நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.
அவருக்கு மாநாடு போன்ற கூட்டத்தை எழுப்புவது என்பது சர்வ சாதாரணம், டீக்கடையில் நின்று டீ குடிப்பது போன்று. அதனால்தான் நேரு என்றால், மாநாடு, மாநாடு என்றால் நேரு' என்று பேசியிருக்கிறார். இதிலிருந்து முதலமைச்சரின் உத்தரவை முதலமைச்சரே மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது முதலமைச்சர் அவர்களே!" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'நாடக அரசியல்; திமுக அரசே மொத்த நகைக் கடனையும் ரத்துசெய்!'