தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், ”மாநிலத்தில் இரண்டு இடங்களில் வெடிகுண்டு வீசப்பட்டு வெடிகுண்டு கலாசாரம் தலைதூக்கியுள்ளது. மதுரையில் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வீட்டிலும், எங்கள் மாவட்ட அமைச்சர் வீரமணி வீட்டிலும் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அமைச்சரிடம் செல்லலாம், அமைச்சருக்கே பிரச்னை என்றால் எங்கு செல்வது? இது போன்ற நிகழ்வுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதேபோல் கும்பகோணத்தில் இரும்புக் கம்பியால் அடித்து வீடு புகுந்து கொலை, கொள்ளை நிகழ்ந்த காணொலி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?“ எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”ஜோலார்பேட்டையில் பீடி தொழிற்சாலையில் நடந்தது சாதாரண தீவிபத்துதான். ஆனால், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக ஊடகங்களில் தவறான செய்தி வந்துள்ளது. இது தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை. சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து விருதுகளைப் பெற்றுள்ளது“ எனக் கூறினார்.
இதையும் படிங்க: கொரோனா அச்சம்: சென்னையில் தொடர்ச்சியாக விமான சேவை ரத்து