சென்னை:Jallikattu Allowed in TN: தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் நடத்தப்பட்டுவரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மக்கள் பெருமளவில் மகிழ்ச்சியோடு பங்குபெற்று வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடுபிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பார்வையாளர்களாக பங்கேற்கும் நிகழ்ச்சியாகும்.
திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப்போட்டிகள் நடத்த ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டியினை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் நடத்த அனுமதித்து அரசு ஆணையிட்டுள்ளது.
கோவிட் -19 நோய்த்தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்:
* ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களும் பெரும்பங்கு வகிப்பதால் , ஒரு காளையுடன் சுமார் 5 முதல் 6 நபர்கள் வருவது வழக்கம். இதனைக் கட்டுப்படுத்தி ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் என உடன் வருபவர்கள், இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை ( RT - PCR Test ) என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள்.
* ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை ( RT - PCR Test ) என்பதற்கான சான்று பெறப்பட்டவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
* தமிழ்நாடு அரசினால் வெளியிடப்படும் கரோனா தடுப்பு நடைமுறைகளை திறந்த வெளி அரங்கின் அளவிற்கேற்ப கடைப்பிடிக்கும் வகையில், பின்பற்றி பார்வையாளர்கள், (Total capacity) சமூக இடைவெளியை அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 விழுக்காட்டிற்கும் மிகாமல் இவற்றில் எது குறைவோ அந்த பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
எண்ணிக்கையில் பார்வையாளர்கள் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT - PCR Test) என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
* ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்துத்துறை இரண்டு டோஸ் அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் கரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை ( RT - PCR Test ) என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
* அனைத்துத்துறை அலுவலர்களும் , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் , பார்வையாளர்களும் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
* வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காண அறிவுறுத்தப்படுகிறது.
* ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்று பிராணிகள் வதை தடுப்பு ( ஜல்லிக்கட்டு நெறிமுறைகள் ) விதிகள், 2017 , அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், அரசினால் விதிக்கப்படும் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவக் காப்பீடு வசதி தொடங்கிவைத்த ஸ்டாலின்